தாய்த்திருநாடு

30/7/13

கேள்விகள் மேலும் கேள்விகளையே எழுப்புகின்றன.....வேதங்களை கற்றுணர்ந்த இரு மாமுனிகளே துவைதம் (ராமனுஜம்) மற்றும் அத்துவைதம் (ஆதிசங்கரர்) ( இதில் விசிஸ்டா அத்வைதம் வேற) என இரு வேறு தத்துவங்களை சொல்கிறார்கள்...( இப்பொழுதுள்ள மாடர்ன் குருக்களோ எல்லாம் ஒன்று தான் என தண்ணீரையும் அதன் வெவ்வேறு நிலைகளையுன் உதாரணம் காட்டி compromise செய்கிறார்கள்.....) இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னால் இருந்தவர்கள் தான்...இவர்களுக்குள் ஏன் இந்த விவாதம் (அவர்கள் வேதத்தை மேற்கோள்காட்டிதான் விவாதம் செய்தனரா என எனக்கு தெரியாது)....ஒரே குழுப்பமாய் இருக்கே.

இந்தப்பதிவைக் காணும்படி கேட்டுக்கொள்கின்றேன்
இந்துமதம்-ஓர்அறிமுகம்

Dear sir I want to know your opinion about caste and its relevant in to days modern society.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ ஜாதி என்பது இன்று சமுதாயத்தில் தவிர்க்கமுடியாததாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் நமது அரசும், அரசியல் வாதிகளும்தான்.ஜாதி  அரசு வேலைகளிலும், கல்விகூடங்களிலும்  சேர மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

  its relevant- என்று பார்த்தால் ஏதோ தேவை இருக்கத்தானே அது சமுதாயத்தில் நிலைத்து நிற்கிறது

ஜாதியைப்பற்றிய எனது கருத்து என்னவென்றால்,  ஒருகாலத்தில் அது மக்களை ஒன்றுசேர்க்கவும் பயன்பட்டது, அது ஒரு இனத்தின் குறியீடு எனவும் கொள்ளலாம்.

ஜாதியை இப்போதைக்கு ஒழிக்கமுடியாது என்று எண்ணுகிறேன்

அதை ஒழிக்கவேண்டிய அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை, அதற்கான தேவை குறையும்போது அது தானாகவே மறைந்துவிடும்.

நாம் செய்யவேண்டியது என்றுபார்த்தால்,
  1. ஜாதி உயர்வு,தாழ்வு பாராட்டுவதை நிறுத்தவேண்டும்
  2. வீண் ஜாதிபெருமை பேசுவதை நிறுத்தவேண்டும்
  3. ஒரு ஜாதியினரைப்பற்றிய Prejudice ஐ தவிர்க்க வேண்டும்
  4. ஜாதியை ஒழிக்கிறேன் என்று ஏதாவது செய்து குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் 
  5. காதலை, காதலாகமட்டும் வைத்துக்கொள்ளலாம் மற்றபடி  சமூகமாற்றம், ஜாதி ஒழிப்பு கருவி என்றெல்லாம் காதலைப் பயன்படுத்தினால் அது உண்மையில் காதல் அல்ல ( காரணமில்லாமல் மலர்வதுதானே காதல்?) அது கலவரத்தில் தான் முடியும். ஆனால் பல தமிழ் அறிவு ஜீவிகள் "ஆதலால் காதல் செய்வீர்" என்று முழங்குகின்றனர் அவர்கள் காதலை ஏதோ சாம்பார் செய்வது என நினைத்துக்கொண்டனர். அவர்களுக்கு காது கொடுக்காமல் காததூரம் சென்றுவிட்டால் நல்லது.
  6. அரசியல் வியாதிகள் ஜாதிபற்றிப் பேசுவதை படிக்கவோ கேட்கவோ வேண்டாம் - P.C.R. போடச்சொல்லி யாரையாவது தூண்டிவிட்டு சமுதாயத்தில் வெறுப்பு குறையாமல் பார்த்துக்கொள்வது இவர்கள்தானே.
  7. மொத்தத்தில் நாம் மனசாட்சி உள்ள மனிதனாக வாழ்ந்தாலே போதும் நம் வாழ்வில் ஜாதி எனும் விஷயம் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ளலாம்

.வேதம் வாய் வழியாக வந்த வரை மட்டும் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அது தகுதியானவர்களுக்கு மட்டுமே வழ்ங்கப்பட்டது...ஆனால் எழுத்து வடிவம் பெற்றவுடன் மாறியிருக்கலாம் இல்லையா....

வேதங்கள் எழுத்துவடிவத்திற்கு வந்தது நவீன காலத்தில்தான், அதுவும் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில், மேலும் இந்திய சமய நூல்கல் பலவற்றை கிருத்துவ பாதிரியார்களே பதிப்பித்துள்ளனர்,அல்லது கிருத்துவ மிஷனரிகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் ஆதரவாளர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன, அவர்களது உண்மையான நோக்கம் ஞானத்தைப்பரப்புவது அல்ல இந்த தேசத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பழிப்பது,அதன் தொடர்ச்சியை குழப்புவது. ஆகவே அவற்றில் இடை செருகல்கள் இருக்கலாம்.

வேதம் மற்றும் வேத கருத்துக்கள் பற்றி ஆராய, விவாதம் செய்ய தகுதி உடையவர்கள் சமஸ்கிருத புலமை உடைய,முறையான வழியில் வேதம்கற்ற ஆன்மிக வாதிகள் மட்டுமே. உண்மையில் நமக்கு அந்த அதிகாரம் இருப்பதாகத் தெரியவில்லை, உங்களது எளிய கேள்விக்கு எனது சிற்றரிவிக்குப்பட்ட பதிலைத் தந்துள்ளேன். அதுவும் வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு.

பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள், வலைத்தளப்பதிவுகள்  மற்றும் மொழிபெயர்ப்புகள் மூலம் வேதம் கற்க முடியாது. அது முறையான வழி அல்ல.  தகுந்த ஆசிரியரின் கீழ் குருகுலத்தில் கற்பதுதான் வேதம். அதுதான் முறையானது அதிகாரப்பூர்வமானது, அப்படிக்கற்றவர்களே வேதத்திற்கு விளக்கம் சொல்ல முடியும்.

இந்துமத அறிவு, சமயப்பயிற்சி உடையவர்கள் கூட ( முறையான வேதம் கற்ற வேதியர் அல்லாதோர்) வேதங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்னும் நிலை இருக்கும்போது, வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்,  யாரோ ஒரு குழப்பவாதி உளரியவற்றை வைத்துக்கொண்டு  வேதங்களையும், அவற்றின் தத்துவங்களையும் விமர்சிக்க முற்படுகின்றனர், அவ்வாறு செய்ய அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

.ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் பத்தாவது சூக்தாவில் (sukta) ஒரு சிஸ்டர் அவளுடைய ப்ரதரை (brother) உடலுறவுக்காக அழைப்பாதாக சொல்லப்படுகிறதா? ஏன் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது? இதை ஒரு புனித நூல் என்று எப்படி சொல்லமுடியும்......மற்றும் வேதங்களில் பல சூத்திரங்கள் இடைச்செருகுகள்(interpolated) என கெ.வி. கிருஷ்ண வாரியர் சொல்கிறாறே? அப்படி என்றால் இதுவும் ஒரு இடைச்செருகாக இருக்குமோ? உங்கள் விளக்கம் தேவை?

எனக்கு கே.வி.கிருஷ்ணவாரியார் பற்றி உண்மையில் ஒன்றும் தெரியாது. வேதங்களில் இடைச்செருகுகள் இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.ஏனென்றால் அவை பயபக்தியுடன் வாய்வழியாக தலைமுறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.(தகுதி உடையவர்க்கு மட்டுமே வேதம் கற்றுத்தரப்பட்டதற்கான காரணம் இப்பொழுது விளங்கியிருக்கும் என எண்ணுகிறேன்).

அடுத்ததாக வேதங்களின் எதாவது ஒரு பாடலின் ஒருவரியைமட்டும் எடுத்துக்கொண்டு அதை ஆராய்வது முறை அல்ல. அதுவும் நாம் ஆராய்வது வேத மந்திரங்களின் மூலத்தை அல்ல அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை. இங்கு மொழிபெயர்த்தவரின் புலமை,மொழிபெயர்ப்பை நாம் புரிந்துகொண்டவிதம், அதை மேற்கோள் காட்டுபவரின் உள்நோக்கம், ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

ஒரு பசு தீர்க்கமுடியாத நோயால் மிகுந்த துன்பத்துடன் இருக்கும்போது, அத் தீராத்துன்பத்தோடு வைத்திருப்பதைவிட அப்பசுவைக் கொன்றுவிடுவது நல்லது  என்பேன் - மஹாத்மா காந்தி. இது ஒரு வாக்கியம், இதை, அதி புத்திசாலியான ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் "பசுவைக் கொன்றுவிடுவது நல்லது  என்பேன் - மஹாத்மா காந்தி"- என மேற்கோள் காட்டி மஹாத்மா பசுக்களைக் கொல்லச்சொன்னார் என்று எழுதினால் அது எப்படிப்பட்டதோ அதைப்போன்றதுதான் இந்தக் குழப்பமும் என்பது எனது கருத்து.

இங்கு அத்தகைய ஒரு சூழல் சொல்லப்பட்டு அது அதர்மம்,விலக்கப்பட்டது என அறிவுறுத்துவதாக நான் புரிந்துகொண்டுள்ளேன். அதுமட்டுமல்ல அந்த பாடலில் அவ்வாறு அழைத்ததாக மட்டும்தான் வருகிறது. அங்கு தவறான உறவு நிகழ்ந்ததாக வரவில்லை.

இப்படி ஒரு தவறை சுட்டிக்காட்டி அதை விலக்கச்சொல்லும்போது, அதனால் அந்தநூலின் புனிதம் எந்தவகையில் கெடும் என்பது எனக்குப் புரியவில்லை.

ரிக்வேதம்,பத்தாவது மண்டலத்தின் பத்தாவது சூக்தம்- ஆங்கில மொழிபெயர்ப்பு உங்கள் பார்வைக்கு.

கூடுதல் தகவல்- 
பைபிளில்  தந்தை மகள் உறவு பற்றியும் மத்தியகிழக்கு ஆசிய மக்களின் வரலாறுபற்றியும் உள்ள தகவல்களைப்படித்துப்பார்த்து, புண்ணிய பாரதத்தின் நாகரீகத்தையும், மற்ற நாகரீகங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ள முடியும்.


மனு ஸ்மிருதியில் உள்ள கோட்பாடுகள் இன்றைய காலகட்டத்திற்கு உதவுமா? ஏன் அவை வரையருக்கப்பட்டன? எந்த காலத்தில்?

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள்.

நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள்.
வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன.


ஸ்மிருதிகள் காலம் மற்றும் இடத்துக்குத்தக்கபடி  மாறும் அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்திரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது.


ஆக, சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.


மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை.


ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது. அதனை இயற்றியவர் மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது.


மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல.


வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது.


மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது.


மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.


மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கண்ணோட்டப் படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க  ஸ்மிருதிகள் ஏற்பட்டுள்ளன அதுவும் பாரதம் முழுதும் அனைத்துதேசங்களிலும் ஒரே ஸ்மிருதி பயன்பாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.